மடகஸ்காரில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!
மடகஸ்காரில் தண்ணீர் மற்றும் மின்வெட்டு தொடர்பில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மக்களின் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர அந்நாட்டு அரசாங்கம் இரவு நேர ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
மடகஸ்காரில் தொடர்ச்சியாக 12 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் வணிகங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். இருப்பினும் போராட்டத்தை கட்டுக்குள் கொண்ட பொலிஸார் கண்ணீர்புகைக்குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையே மின் துண்டிப்பை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் வணிக நிறுவனங்களில் இருந்த பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த மக்கள் ஜனாதிபதி நிரினா ராஜோலினாவுக்கு நெருக்கமானவர்கள் என்று அறியப்பட்ட அரசியல்வாதிகளின் மூன்று வீடுகளுக்கு தீவைத்துள்ளனர்.
இந்த மக்கள் போராட்டம் மெல்ல மெல்ல வன்முறையாக உருவெடுத்து வருகின்றது. இதன் நிமித்த இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





