இந்திய மருத்துவக் குழு தனது பணியை வெற்றிகரமாக நிறைவு செய்து இந்தியா பயணமானது
இந்திய மருத்துவக் குழு தனது பணியை வெற்றிகரமாக நிறைவு செய்து இந்தியா பயணமானது
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மற்றுமொரு தொகுதி உலர் உணவுப் பொருட்கள்

சாகர் பந்து நடவடிக்கையின் கீழ் இலங்கைக்கு வந்த இந்திய மருத்துவக் குழு, இலங்கையில் தனது மனிதாபிமானப் பணிகளை நிறைவு செய்து நேற்று முன்தினம் (14) இந்தியா திரும்பியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் இந்திய குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறை ரீதியான பங்களிப்பு தொடர்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்தக் குழு நாடு திரும்பிய நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மற்றொரு தொகுதி நிவாரணப் பொருட்களும் நன்கொடையாக வழங்கப்பட்டன.

இந்த மருத்துவக் குழுவை இந்தியாவிற்கு அழைத்துச் செல்ல வந்த இந்திய விமானப்படையின் C-17 குளோப்மாஸ்டர் விமானம் மூலம் 10 டொன் மருந்துகள் மற்றும் 15 டொன் உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன. டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிகளுக்கு உதவுவதற்காக இந்த உதவிப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மேலும், நேற்று (15) ஷோர்யா எனப்படும் இந்திய கடலோர காவல்படை கப்பலில் 50 டொன் உலர் உணவுப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டன. இந்த பொருட்களை இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டேவினால் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவாக்குவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

சாகர் பந்து நடவடிக்கையின் கீழ் இலங்கைக்கு இந்திய மருத்துவக் குழுவின் தொடர்ச்சியான மனிதாபிமான உதவிகள் மற்றும் சேவைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பையும் நீண்டகால நட்புறவையும் பிரதிபலிக்கின்றன.





