இலங்கையில் புதிய எதிர்க்கட்சி கூட்டணி உதயம்
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, மக்களின் குரல் என்ற புதிய எதிர்க்கட்சி கூட்டணியை நேற்று உதயமாக்கிய நிலையில், அக்கூட்டணியால் அரசுக்கு எவ்விதச் சவாலும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
“எதிர்க்கட்சி கூட்டணி குறித்து எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் அணிசேர்வது நல்லது. பின்னர், மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டவர்களை மக்கள் ஒரே குழுவாகத் தோற்கடிக்க முடியும்.” என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று உதயமான புதிய கூட்டணியில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் ஐக்கிய முன்னணி, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி மற்றும் நவ ஜனதா பெரமுன ஆகியன இடம்பெற்றுள்ளன.
எனினும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இதில் பங்கேற்கவில்லை. இது இக்கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகின்றது.
அரசாங்கத்தின் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் ஜனநாயக விரோத நடைமுறைகளுக்கு எதிராக நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் ஒரு பாரிய பேரணியை நடத்துவதற்கும் இந்தக் கூட்டணி தீர்மானித்துள்ளது.
அதில் சஜித் அணி பங்கேற்பதும் சந்தேகமே. எனினும், பிரதான எதிர்க்கட்சியாகத் தமது பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தி நிறைவேற்றும் என நம்புவதாகக் கூட்டணிப் பிரதிநிதிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.





