புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும் – ஜனாதிபதி அதிரடி உத்தரவு
நாட்டின் கல்வி முறைமையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேவையேற்படின் அதற்கு எதிராக சட்டங்கள் கொண்டுவரப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறை ராகுல கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் இன்று கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கல்வி தொடர்பான புதிய அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அதில் தாமும் கல்வி அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் சிலரும் உள்ளடங்குவதாகவும் தெரிவித்தார்.
2035 ஆம் ஆண்டளவில் நாட்டில் புதிய கல்வி முறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் அபிலாஷையாகும்.
காலநிலை மாற்றத்தை ஒரு பாடமாக மாற்றவும், புதிய வரலாற்று நிறுவனத்தை நிறுவவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பாடசாலை பாடத்திட்டம் மற்றும் பல்கலைக்கழக கல்வியில் புதிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
அத்தோடு அனைத்து மாணவர்களும் அறிவியல் மற்றும் கலை பாடங்களை படிக்க வேண்டும். மேலும், புவியியல், வரலாறு போன்ற பாடங்களை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
முதலில் உயர்தரப் பாடங்கள் நடைபெறும் அனைத்துப் பாடசாலைகளும் இணையத்துடன் இணைக்கப்படும்.
அதன்பின்னர் சாதாரண தரம் வரை கல்வி கற்பிக்கப்படும் அனைத்துப் பாடசாலைகளுக்கும் இணைய வசதி வழங்கப்படும்.
எதிர்வரும் 10 வருடங்களுக்குள் அனைத்துப் பாடசாலைகளிலும் ஆங்கிலக் கல்வியை வழங்கவும், ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பில் ஆங்கிலத்தை கட்டாயமாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.