இந்திய தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி – ஜனாதிபதி ரணில் அனுப்பிய உடனடி செய்தி
உலகிலேயே மிக பெரிய ஜனநாயகத் தேர்தலான இந்தியாவின் பாராளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியை தன்வசப்படுத்தியது.
இதன்படி, நரேந்திர மோடி, மூன்றாவது முறையாகவும் ஆட்சி அமைக்க போவதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மூன்றாவது முறையாகவும் வெற்றியை தன்வசப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றில் இந்திய மக்கள் வெளிப்படுத்திய நம்பிக்கையை ஜனாதிபதி அங்கீகரித்ததோடு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளில் தொடர்ச்சியான வளர்ச்சியில் நம்பிக்கை வைக்கின்றேன்,” என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்ட பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா கூட்டணியை உடைக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் உள்ள 543 லோக்சபா தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பாஜக 244 இடங்களில் முன்னணியில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 231 இடங்களில் முன்னணியில் உள்ளது.
இப்போது உள்ள சூழலில் பாஜகவிற்கு அறுதி பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பே இல்லை என்றே தெரிகிறது. இதனால், கூட்டணி கட்சிகளை நம்பியே ஆட்சி அமைக்க வேண்டிய நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது.