மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1037 ஆக உயர்வு
மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1037 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 672 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மொராக்கோவில் உள்ள மராகேஷில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது. அங்கு 840,000 மக்கள் வாழ்கின்றனர் என்று கூறப்படுகிறது.
பூகம்பத்தின் மையம் மராகேஷில் இருந்து தென்மேற்கே 72 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அட்லஸ் மலைப்பகுதியில் அமைந்துள்ளது.
அருகில் உள்ள மலைப்பகுதிகளில் பல வீடுகள் முற்றாக இடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
இடிந்த வீடுகள் மற்றும் கட்டிடங்களின் இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதாகவும் நம்பப்படுகிறது.
மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் வீதிகள் சேதமடைந்துள்ளதாலும் தகவல் தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டதாலும் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் நேற்றிரவு முதல் வீதிகளிலேயே தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதால், வீடுகளுக்குச் செல்ல அச்சமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அண்டை நாடான அல்ஜீரியாவும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டது, ஆனால் இதுவரை உயிர் மற்றும் பொருள் சேதம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதற்கிடையில், உலகின் பல நாடுகள் மொராக்கோவுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்க முன் வந்துள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ், இந்தியா, சீனா, இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை இதில் அடங்கும்.
ஐக்கிய நாடுகள் சபையும் மொரோக்கோவிற்கு ஆதரவை தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
120 ஆண்டுகளில் வட ஆபிரிக்க பிராந்தியத்தில் ஒரு நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.