ராமநாதபுரத்தில் பாலம் அமைப்பதை தடுக்க முயன்ற 80க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கருங்குடி ஊராட்சி பால்குளம், ஊரவயல், கருங்குடி, வளமாவூர், மாவிலிங்கைஏந்தல் ஆகிய 5 கிராமங்கள் உள்ளது.
இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்களுடைய வாழ்வாதாரமே விவசாயம் தான். விவசாயத்தை நம்பியே இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் நாரை பறக்க முடியாத 48 மடை கொண்ட ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் இருந்து பால்குளம் கண்மாய்க்கு உரிய வரத்து கால்வாய் தண்ணீர் இல்லாததால் வானம் பார்த்த பூமியான பால்குளம் கன்மாய்க்கு மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் பெருகும், விவசாயம் செய்ய முடியும் என்ற சூழல் இருந்து வருகின்றது.
பால்குளம் கண்மாய் தண்ணீரை நம்பி 300 ஏக்கரில் 5 கிராம விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக நெல், மிளகாய், பருத்தி போன்ற விவசாயத்தில் அதிகம் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் திருப்பாலைக்குடியில் இருந்து, பால்குளம், கொத்தியார்கோட்டை வழியாக சோழந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் கொத்தியார்கோட்டை அருகில் நெடுஞ்சாலைத் துறையினர் சாலையை பிளந்து பாலம் அமைக்கும் பணியை கடந்த ஆண்டு தொடங்கியுள்ளனர்.
சுமார் ரூ 17 லட்சம் மதிப்பீட்டில் பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இந்த பாலம் அமைப்பதற்கு 5 கிராம மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளுக்கு பயன்படாத இந்தப் பாலத்தை நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து கொத்தியார் கோட்டை அருகில் சாலையின் நடுவில் பாலம் அமைத்தால் பால்குளம் கண்மாயின் தண்ணீர் கொத்தியார் கோட்டை வழியாக வெளியேறுவதால்
சுமார் 300 ஏக்கர் விவசாயம் பாதிக்கப்டுவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவோடு வட்டாட்சியர் முருகவேல் போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைதுறையின் பாலம் கட்டும் பணியை துவங்கினர்.
அதனைத் தடுக்க முயன்ற கிராம மக்கள் 80க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து வாகனங்களில் ஏற்றி தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளதால் 30க்கும் மேற்பட்ட போலீஸார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்,
மூதாட்டி ஒருவரை இரண்டு பெண் போலீசார் இரக்கமின்றி தண்ணீரிலும் தரையிலும் இழுத்து போலீஸ் வேனில் ஏற்றியது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.