பெருவில் 3,400க்கும் அதிகமான பெண்கள் மாயம்!
பெருவில் 3,400க்கும் அதிகமான பெண்களைக் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 1,902 பேர் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டனர். எஞ்சிய 1,504 பேரை இன்னும் காணவில்லை. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் இவர்கள் காணாமல் போயுள்ளார்.
அத்தகைய நிகழ்வுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை. காணாமல்போனவர்களில் பெரும்பாலானோர் கடத்தப்படுபவர்கள் என்று கூறப்பட்டது.
இருப்பினும் அந்தப் பிரச்சினைக்கு பெருவின் அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதில்லை என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு 5,380க்கும் அதிகமான பெண்கள் காணவில்லை எனப் புகார் செய்யப்பட்டது.
அவர்களில் பெரும்பகுதியினர் இளம் பெண்களும் பதின்ம வயதுப் பெண்களும் என்று கூறப்பட்டது.
பெண்கள் விருப்பத்துடன் ஓடிப்போகின்றனர் என்ற எண்ணத்தில் காவல்துறையினர் அந்தச் சம்பவங்களைப் போதுமான அளவு விசாரிப்பதில்லை எனப் பல்வேறு அரசாங்கச் சார்பற்ற அமைப்புகள் கூறுகின்றன.