உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நாம் செய்யும் தவறுகள்
 
																																		இந்த அவசர வாழ்க்கையில் பல நோய்கள் நம்மை ஆட்கொண்டு பாடாய் படுத்துகின்றன. இவற்றில் உடல் பருமனுன் ஒன்று. உடல் எடை அதிகரிப்பதால், நம் ஆளுமைக்கு பாதிப்பு வருவதோடு மட்டுமல்லாமல் இன்னும் பல வித தீவிர நோய்களுக்கும் இது வழிவகுக்கின்றது. ஆகையால், எடை அதிகரிக்கத் தொடங்கினால் உடனடியாக அதை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி எடுக்க வேண்டும்.
ஆனால், உடல் எடையை குறைப்பது அத்தனை சுலபமல்ல. அதுவும் தொப்பை கொழுப்பு அதிகமாகிவிட்டால், அதை குறைப்பது ஒரு பிரம்ம பிரயத்னமாகவே உள்ளது. உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். இதனுடன் உடல் எடையை குறைக்க சரியான வழிமுறைகளை பின்பற்றுவதும் மிக அவசியமாகும்.
தவறான முயற்சிகள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். உடல் எடையை குறைக்க தீவிர உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு அவசியம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். சிலருக்கு இவற்றால் பலன் கிடைக்கிறது. சிலருக்கு இதனால் எந்த பலனும் கிடைப்பதில்லை. அதாவது இவை எப்போதும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை உறுதியாக கூற முடியாது. சில சமயம் இவற்றால் நேர்மாறான விளைவுகளும் ஏற்படலாம்.
பல வித சமூக வலைதளங்களில் உடல் எடையைக் குறைக்க வரும் குறிப்புகளைப் பார்த்து, மக்கள் சற்றும் யோசிக்காமல் அவற்றை பின்பற்றத் தொடங்குகிறார்கள். ஆனால் இவை அனைத்தும் எல்லோருக்கும் பலனளிக்காது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
எடை இழப்பு தொடர்பான சில தவறான புரிதல்கள் குறித்தும், எடை அதிகரிக்காமல் இருக்க தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் குறித்தும் இங்கே காணலாம்.
கார்போஹைட்ரேட்டுகள்
உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு கார்போஹைட்ரேட் தான் எதிரி என்ற ஒரு பொதுவான கருத்து உள்ளது. ஆனால் அனைத்து வித கார்போஹைட்ரேட்டுகளும் ஒரே மாதிரியானவை அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். துரித உணவுகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருக்கும் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்டுகளை (Carbohydrates) உணவில் சேற்த்துக்கொள்ளலாம்.
கொழுப்பு
உடல் எடையை குறைக்க எண்ணெய், நெய் போன்ற கொழுப்பு (Cholesterol) அதிகம் உள்ள உணவுகளை சிலர் முற்றிலுமாக தவிர்த்து விடுகிறார்கள். ஆனால் இது தவறு. உங்கள் உடலுக்கு ஏற்ற எண்ணெயை பற்றி அறிந்துகொண்டு அதை அளவோடு உட்கொள்ளலாம். உடலின் சீரான இயக்கத்திற்கு சரியான அளவு நல்ல கொழுப்பும் தேவைப்படுகின்றது.
உடற்பயிற்சி
தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி (Exercise) மற்றும் உணவு கடுப்பாடு இரண்டும் அவசியமாகும். ஒரு விஷயத்தை மட்டும் சார்ந்து இருப்பது தவறு. உடற்பயிற்சியில் மட்டும் கவனம் செலுத்தி, உணவை கட்டுப்படுத்தாமல் இருந்தால், உடல் எடையை குறைப்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாகத் தான் இருக்கும்.
கடுமையான உணவு கட்டுபப்பாடுகள்
சிலர் உடல் எடையை குறைக்க மிகவும் அதிகமான உணவு கட்டுப்பாடுகளை (Diet) மேற்கொள்கிறார்கள். சிலர் உணவின் அளவை வெகுவாக குறைத்து விடுகிறார்கள். ஆனால், உணவின் அளவை குறைப்பதால், உடல் எடையை வேண்டுமானால் சில நாட்களுக்கு குறைக்கலாம், ஆனால், நீண்ட காலம் நீடிக்காது. வழக்கமான வாழ்க்கை முறைக்கு நாம் திரும்பும்போது, எடை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகையால், எடை இழப்பு டயட்டில் நாம் எப்போதும் பின்பற்றக்கூடிய ஒரு உணவுமுறையை பின்பற்றுவது நல்லது.
தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க, சமச்சீரான உணவும், போதுமான தண்ணீர், போதுமான தூக்கம், தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, நேர்மறையான எண்ணங்கள் ஆகியவை மிகவும் முக்கியமானவை.
 
        



 
                         
                            
