காசா மீதான இஸ்ரேலின் திட்டத்தை அம்பலப்படுத்திய அமைச்சர்..
காசாவின் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்துவதற்கான திட்டமும் இருக்கிறது என இஸ்ரேல் அமைச்சர் அமிசாய் எலியாகு கூறியிருப்பது பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேல், ஹமாஸ் படையினருக்கு இடையேயான போர் ஒருமாதத்தை நெருங்கி உள்ளது. காசாவின் வடக்கு பகுதியில் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது காசா சிட்டி முழுவதும் இஸ்ரேல் படை முற்றுகையிட்டுள்ளது. இனியும் அப்பகுதியில் மக்கள் தங்கியிருந்தால் அது தற்கொலைக்கு சமம் என மிரட்டல் விடுத்துள்ளது.
ஏற்கெனவே வடக்கு காசாவில் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் படை தாக்குதல் நடத்திய நிலையில், நேற்று அதிகாலை மத்திய காசாவில் உள்ள அல் மகாஸி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசின. இதில் 47 பொதுமக்கள் பலியாகினர்.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் ரமல்லாவில் நேற்று பாலஸ்தீன அதிபர் அப்பாசை சந்தித்து பேசினார். அப்போது அதிபர் அப்பாஸ் உடனடியாக போர் நிறுத்தம் அறிவித்து காசாவில் மனிதாபிமான உதவிகள் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். பல தரப்பிலும் அழுத்தம் அதிகரிப்பதால், தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவும் பரிந்துரைத்தது. ஆனால் இதனை திட்டவட்டமாக நிராகரித்த இஸ்ரேல் அரசு, ஹமாஸ் படையினர் பிடித்து வைத்துள்ள 240 பணயக் கைதிகளையும் விடுவிக்கும் வரை போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை என கூறி உள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேலின் ஜெருசலேம் விவகாரம் மற்றும் பாரம்பரிய துறை அமைச்சரான வலதுசாரி கட்சி ஓட்ஸ்மா யெஹுதிட்டை சேர்ந்த அமிசாய் எலியாகு அளித்த பேட்டியில், ‘‘காசாவில் போராளிகள் அல்லாத யாரும் இல்லை. எனவே சர்வதேச சட்டத்தின்படி அங்கு பாதுகாக்க வேண்டியவர்கள் என யாரும் கிடையாது. எனவே காசாவில் அணுகுண்டு தாக்குதல் நடத்தும் வாய்ப்பும் உண்டு. அதுவும் நடக்கலாம்’’ என்றார்.
அவரது இந்த பேச்சு பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மறுப்பு தெரிவித்துள்ளார்.அவர் அளித்த பேட்டியில், ‘‘இது நிஜத்தில் இருந்து மாறுபட்ட கருத்து. இஸ்ரேல் ராணுவப் படை சர்வதேச சட்டத்தின் உயர்தரத்தை பின்பற்றி வருகிறது. போரில் ஈடுபடாத மக்களை நாங்கள் காயப்படுத்தவில்லை. இதை நாங்கள் தொடர்ந்து பின்பற்றி போரில் வெற்றி பெறுவோம்’’ என்றார்.
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் அமிசாயை சஸ்பெண்ட் செய்து நெதன்யாகு நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் மூலம் போருக்கு பிறகு இஸ்ரேல் அமைத்த பாதுகாப்பு கேபினட் குழுவில் அவருக்கு இடமும் மறுக்கப்பட்டு இருக்கிறது.