கேள்விக்குறியான மெட்டாவின் எதிர்காலம் – இன்ஸ்டா, வாட்ஸ்அப் கைநழுவிப் போகும் அபாயம்

சமூக ஊடக உலகில் முடிசூடா மன்னனாக விளங்கும் மெட்டா நிறுவனம் தற்போது ஒரு சிக்கலான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற பிரபலமான செயலிகளின் தாய் நிறுவனமான மெட்டா, அமெரிக்க அரசின் வணிகக் கட்டுப்பாட்டு அமைப்பான ஃபெடரல் டிரேட் கமிஷனின் (FTC) கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. இந்த விமர்சனம், எதிர்காலத்தில் மெட்டாவின் கட்டமைப்புக்கே சவால் விடும் வகையில் மாறியுள்ளது.
முன்னதாக பேஸ்புக் என்ற பெயரில் அறியப்பட்ட நிறுவனம், சில ஆண்டுகளுக்கு முன்பு மெட்டா என பெயர் மாற்றம் பெற்றது. இந்நிலையில், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றை மெட்டா வாங்கியது சந்தையில் போட்டியை குறைக்கும் நோக்கம் கொண்டது என்று FTC குற்றம் சாட்டியுள்ளது.
குறிப்பாக, வளர்ந்து வரும் போட்டியாளர்களை எதிர்கொள்வதற்கு பதிலாக, அவர்களை விலைக்கு வாங்குவது மார்க் ஜுக்கர்பெர்க்கின் உத்தியாக இருந்தது என FTC வாதிடுகிறது. இதன் விளைவாக, 2012ல் இன்ஸ்டாகிராமையும், 2014ல் வாட்ஸ்அப்பையும் மெட்டா கைப்பற்றியது.
சிறு புகைப்படப் பகிர்வு செயலியாக இருந்த இன்ஸ்டாகிராமை ஒரு பில்லியன் டாலருக்கும், வாட்ஸ்அப்பை இருபத்தி இரண்டு பில்லியன் டாலருக்கும் மெட்டா வாங்கியது மொபைல் பயனர்களிடையே தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளவே என்று FTC கூறுகிறது.
ஒருவேளை நீதிமன்றம் இந்த வழக்கில் மெட்டாவுக்கு எதிராக தீர்ப்பளித்தால், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பை விற்க வேண்டிய கட்டாயம் அந்நிறுவனத்திற்கு ஏற்படலாம். இது மெட்டாவின் வருவாயில் பெரும் சரிவை ஏற்படுத்தும். ஏனெனில், இன்ஸ்டாகிராம் மட்டும் அமெரிக்காவில் மெட்டாவின் விளம்பர வருவாயில் கணிசமான பங்களிப்பை அளிக்கிறது.
தற்போது இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. மார்க் ஜுக்கர்பெர்க்கிடம் FTC அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையின் முடிவுகள் மெட்டாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.
ஒருவேளை மெட்டா இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பை விற்க நேர்ந்தால், அது சமூக ஊடக சந்தையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். டிக்டாக், யூடியூப் போன்ற பிற நிறுவனங்களுக்கும் இது ஒரு பாடமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.