ஜனாதிபதியின் கருத்திற்கு மறுப்பு தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்
இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட முயற்சியானது ஐம்பது வீதம் நிறைவேறியுள்ளதாக பிரித்தானியாவில் வைத்து ஜனாதிபதி தெரிவித்த கருத்தினை ஏற்றுக்கொள்ளமுடியாது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
50வீதம் தீர்வினை தமிழ் மக்கள் அடைந்துள்ளார்கள் என்ற கூற்றானது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாதது எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசபையின் கலாசார மண்டபத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று வெல்லாவெளியில் நடைபெற்றது.
கடந்த கொரனா தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் இடைநிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஊலக வங்கியின் சுமார் 33மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு வெல்லாவெளியில் அமைக்கப்படவுள்ள கலாசார மண்டபத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
போரதீவுப்பற்று பிரதேசசபையினால் இந்த கலாசார மண்டபத்திற்கான வேலைப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
போரதீவுப்பற்று பிரதேசசபையின் செயலாளர் கௌரிபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.
சுpறப்பு அதிதிகளாக போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் செல்வி ஆர்.இராகுலநாயகி,பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் இணைப்பு செயலாளர் வி.மதிமேனன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகளுக்கு ஆளும்கட்சியுடன் இணைந்து செயற்படுவோம்.அதற்காக நாங்கள் ஆளும்கட்சியுடன் இணைந்ததாக அர்த்தம் இல்லை.மக்கள் எங்களை வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பியுள்ளார்கள்.அவர்களுக்கான நலத்திட்டங்கள் வரும்போது அதனை வரவேற்கவேண்டியது மக்கள் பிரதிநிதிகளாக எங்களது கடமையாகும்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பதுவேறு,பொருளாதார ரீதியான அபிவிருத்தி என்பதுவேறு.இந்த அரசாங்கம்பொறுப்பேற்றது தொடக்கம் ஒரு சில நல்ல காரியங்களும் செய்துள்ளது.
இந்த ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் காணிவிடுவிப்பு,அரசியல்கைதிகள் விடுவிப்பு என பல்வேறுபட்ட தமிழ் மக்கள் நலன்சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை மறுக்கமுடியாது.மட்டக்களப்பு மாவட்டத்தில் 33ஆண்டுகளுக்கு மேலாக இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டிருந்த முறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது.கூடுதலான அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆனால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்திசெய்யுமளவுக்கு இணைந்த வடகிழக்கில் நிரந்தரமான தீர்வினைக்கொண்டுவருவதற்கான எந்த முயற்சியும் முன்னெடுக்கப்படவில்லை.
2009ஆம் ஆண்டு வரையில் வடகிழக்கில் ஆயுதப்போராட்டம் நடைபெற்றது.அதன் பின்னர் வடகிழக்கில் சிங்கள மயமாக்கல் என்னும் யுத்தம் நடைபெற்றுவருகின்றது.
இதற்கு ஜனாதிபதி ஒத்துழைப்பு வழங்காவிட்டாலும் அரச இயந்திரங்கள் அதற்கு இராணுவத்துடன் இணைந்து முன்னெடுப்புகளை மேற்கொள்கின்றனர்.
இதன்போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,எங்களது அரசியல் பயணத்தில் நாங்கள் இரண்டு விடயத்தில் கவனமாகயிருக்கின்றோம்.ஒன்று உரிமைசார்ந்த விடயங்கள்.மக்களின் உரிமைசார்ந்த விடயத்தில் மிக கவனமாகயிருக்கின்றோம்.
கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையில் வலிமையான அரசியல் கட்டமைப்பினை உருவாக்கும்போதுதான் தமிழ் மக்களின் இருப்பினை பாதுகாத்துக்கொள்ளமுடியும் என்ற உறுதியான கொள்கையுடன் நாங்கள் பயணிக்கின்றோம்.
கிழக்கு மாகாணத்தில் உரிமைக்காக நாங்கள் எவ்வளவு வேகமாக பயணிக்கின்றோமோ அதற்கு சமாந்திரமாக அபிவிருத்திசார்ந்த விடயத்திலும் நாங்கள் கவனம் செலுத்துகின்றோம்.
கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் பெரும்பான்மையாக தமிழர்கள் உள்ளபோதிலும் இனவிகிதாசாரம் என்பது தொடர்ச்சியாக குறைவடைந்துவருகின்றது.திட்டமிட்ட வகையில் இனவிகிதாசாரத்தினை குறைக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.