துருக்கியில் தேவாலயத்துக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்திய முகமூடி அணிந்த நபர்கள்!
துருக்கி நாட்டில், நேற்று தேவாலயம் ஒன்றில் ஆராதனை நடந்துகொண்டிருந்தபோது, திடீரென உள்ளே நுழைந்த முகமூடி அணிந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
ஒருவர் தலையில் குண்டுபாய, தேவாலயத்தில் இருந்தவர்கள் தரையில் படுத்துக்கொள்ள, அப்போது எதிர்பாராவிதமாக துப்பாக்கியுடன் வந்தவர்களில் ஒருவருடைய துப்பாக்கி செயல்படாமல் போயுள்ளது. உடனடியாக இருவரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.இந்த துயர சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார், பலர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் Tuncer Cihan (52) என்பவர் பலியான நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு அவரைக் குறிவைத்து நடத்தப்பட்டதாக இருக்கலாமேயொழிய தேவாலயத்தைக் குறிவைத்து நடத்தப்பட்டதாக இருக்க வாய்ப்பில்லை என முதலில் அதிகாரிகள் தெரிவித்தார்கள்.ஆனால், பின்னர் ஐ எஸ் அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக்கொண்டது. கிறிஸ்தவர்களையும் யூதர்களையும் குறிவைக்குமாறு தங்கள் அமைப்பின் தலைவர் அழைப்புவிடுத்ததைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அந்த தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய நபர்கள், தாக்குதல் நடத்துவதற்காக அமைதியாக நடந்துவரும் காட்சிகள் சிக்கியுள்ளன.பின்னர், நேற்று மாலையே, துப்பாக்கிச்சூடு நடத்திய இருவரையும் கைது செய்துள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
துப்பாக்கிச்சூடு நடத்தப்படும்போது, போலந்து நாட்டு தூதரான Witold Lesniak என்பவரும் அவரது குடும்பத்தினரும் தேவாலயத்துக்குள் இருந்தது குறிப்பிடத்தக்கது. என்றாலும், அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என நகர மேயர் தெரிவித்துள்ளார்