வட மாகாணத்தில் விளையாட்டில் சாதனை படைத்த மன் /புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி!
வட மாகாண ரீதியாக இடம்பெற்ற 2023 ஆண்டுக்கான பாடசாலை ரீதியான விளையாட்டு நிகழ்வில் வெற்றி பெற்ற மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் (12) பாடசாலை அதிபர் அருட்சகோதரர் S.சந்தியாகு FSC தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது
கடந்த வாரம் முழுவதும் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற வடமாகாண பாடசாலைகளுக்கான விளையாட்டு நிகழ்வில் மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி 80 புள்ளிகளை பெற்று ஆண்கள் பிரிவில் மன்னார் வலயத்தில் முதலாம் இடத்தையும், மாகாண ரீதியாக இரண்டாம் இடத்தை பெற்று மன்னார் வலயம் மாகாண ரீதியாக முதல் நிலையை பெற்றுக்கொள்ள வழி வகுத்திருந்தது.
இந்த நிலையில் குறித்த மாகாண போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் மன்னார் வலய உதவி கல்வி பணிப்பாளர் .ஞானராஜ் பங்குபற்றுதலுடன் இடம் பெற்றது.
குறித்த மாகாண விளையாட்டு போட்டிகளில் மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி 3 தங்கப் பதக்கங்களையும், 3 வெள்ளி பதக்கங்களையும், 2 வெண்கல பதக்கங்களையும், 6 நான்காம் இடங்கள், மற்றும் 2 ஐந்தாம் இடங்களை பெற்று கொண்டது.
மேலும், குறித்த போட்டிகளில், 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான அஞ்சலோட்ட போட்டியில் மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மாணவர்கள் புதிய மாகாண சாதனையை நிலை நாட்டியதோடு ,14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் மாணவன் ப்ரோமியன் மாகாண சாதனையை சமன் செய்திருந்தார்.
இந்த நிலையில் வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் பதக்கங்கள் மற்றும் வெற்றி கிண்ணங்களும் கையளிக்கப்பட்டது,