மணிப்பூரில் தீவிரமடையும் போராட்டம்! 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரியும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கவர்னர் மாளிகை, தலைமைச் செயலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு மணிப்பூர் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டிஜிபி மற்றும் பாதுகாப்பு ஆலோசகருக்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது.
டிஜிபி மற்றும் மாநில அரசின் பாதுகாப்பு ஆலோசகரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இம்பாலில் உள்ள ராஜ்பவன் நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.
மேலும், வன்முறையை மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு பரப்பும் நோக்கில் படங்கள், வெறுப்பு பேச்சு மற்றும் வெற்று வீடியோக்கள் சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்பட்டு வருகிறது.
இதனை கட்டுப்படுத்தும் விதமாக மணிப்பூரில் இணைய சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது. வருகிற 15-ந்தேதி வரை 5 நாட்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்படுவதாக மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது.
முன்னதாக, மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட இம்பால் மேற்கு மற்றும் இம்பால் கிழக்கு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து நடந்து வரும் மெய்தி இனத்தினருக்கும் குக்கி இனத்தினருக்கும் இடையிலான தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.