மலேசியா – கோலா குபு பாரு இடைத்தேர்தலில் பிரதமர் அன்வார் கூட்டணி வெற்றி
சிலாங்கூரின் கோலா குபு பாரு தொகுதிக்கு மே 11ம் திகதி நடைபெற்ற இடைத்தேர்தலில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.
பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக் கட்சியான ஜனநாயக செயல் கட்சியின் (டிஏபி) வேட்பாளர் பாங் சோக் தாவ், 14,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். செல்லுபடியாகும் வாக்குகளில் இது கிட்டத்தட்ட 57.2 சதவீதம் எனத் தெரிவிக்கப்பட்டது.
மலேசிய ஆளும் கூட்டணிக்கான ஆதரவு நிலவரத்தைக் காட்டுவதாக இந்த இடைத்தேர்தல் கருதப்பட்டது.
கோலா குபு பாருவில் மூன்று தவணைக் காலத்திற்கு வெற்றிபெற்ற டிஏபி கட்சியின் திருவாட்டி லீ கீ ஹியோங், கடந்த மார்ச் 21ம் திகதி சினைப்பைப் புற்றுநோயால் காலமானார். அதையடுத்து அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
நான்கு முனைப் போட்டி இடம்பெற்ற இந்த இடைத்தேர்தலில், எதிர்த்தரப்பு பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி வேட்பாளர் கைருல் அஸாரி சாவுட்டுக்கு ஆதரவாக 10,131 வாக்குகள் (41.4 சதவீதம்) பதிவாயின.
போட்டியிட்ட மேலும் இரு வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்.