அஸ்வெசும திட்டம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ள மஹிந்த!
அஸ்வெசும நலன்புரி செயற்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்துரையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில், சமூர்த்தி அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போதே மகிந்த ராஜபக்ஷ மேற்படி தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ‘சமுர்த்தி நலன்புரி திட்டத்துக்கு பதிலாக அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள அஸ்வெசும நலன்புரி செயற்திட்டம் சமூக கட்டமைப்பில் பாரிய முரண்பாட்டை தோற்றுவித்துள்ளதுடன், பயனாளர் தெரிவு விவகாரத்தில் அரசாங்கம் தவறிழைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல விடயங்களை தெளிவுப்படுத்தினார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகவும மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்தார் எனத் தெரிவித்துள்ளார்.