கே.எல்.ராகுலை அவமானப்படுத்திய LSG அணியின் உரிமையாளர்
2024ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர், கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கியது. சென்னை, ராஜஸ்தான், பெங்களூரு, லக்னோ, ஹைதராபாத், மும்பை என மொத்தம் 10 அணிகள் கொண்ட இந்த 20 ஓவர் ஐ.பி.எல் தொடர், தற்பாேது ப்ளே ஆஃப் தகுதி சுற்றுக்கான கட்டத்தை எட்டியிருக்கிறது.
இந்த சீசனில், நடப்பு சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி, ஆரம்பத்தில் நன்றாக செயல்பட்டாலும், அடுத்தடுத்த போட்டிகளில் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது.
ஐ.பி.எல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி, சன்ரைஸர்ஸ் ஐதாராபாத் அணியை எதிர்கொண்டது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானாத்தில் இப்போட்டி நடைப்பெற்றது.
லக்னோ, டாஸ் வென்றதை அடுத்து அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய லக்னோ அணி, 20 ஓவர் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை குவித்தது. ஆயுஷ் படோனி, நிக்கோலஸ் பூரான் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் அணிக்கு தேவையான ரன்களை எடுத்துக்கொடுத்தனர். இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே தங்களின் வித்தைகளை காண்பிக்க ஆரம்பித்தனர்.
தொடக்க நாயகர்களான டிராவிஸ் ஹெட், 30 பந்துகளில் 89 ரன்களையும், அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 75 ரன்களையும் எடுத்தனர். லக்னோ அணி வீரர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் ஹைதராபாத் அணியின் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாமல் போனது. இறுதியில், 20 ஓவரில் முடிக்க வேண்டிய போட்டியை 9.5 ஓவரில் 167 ரன்களை விளாசி ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், கடந்த சில நாட்களாகவே இணையத்திலும் நேரிலும் தன்னை நோக்கி வரும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். நேற்றைய போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி மோசமான தோல்வியை தழுவியதை தொடர்ந்து, எல்.எஸ்.ஜி அணியின் ரசிகர்கள் கே.எல்.ராகுலை மோசமாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர். ரசிகர்கள், விமர்சனம் செய்வதும் செய்யாமல் போவது வாடிக்கைதான். ஆனால், லக்னோ அணியின் உரிமையாளரே அத்தனை கேமராக்கள் முன்னிலையிலும் கே.எல்.ராகுலை நேராக நிற்க வைத்து வசைபாடினார். இது, பார்ப்பவர்களு கோபத்தையும் அதிர்ச்சியையும் உண்டாக்கியது.
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் உரிமையாளர், சஞ்சீவ் கோயேங்கா (Sanjiv Goenka). இவர், நேற்று லக்னோ அணி ஹைதராபாத் அணிக்கான மோதி தோல்வியுற்றவுடன் கோபமுற்றதும், பின்னர் அவரது முக பாவனைகள் மாறியதும் கேமராக்களில் தெள்ளத்தெளிவாக காண்பிக்கப்பட்டது. அந்த வீடியோவில், கே.எல்.ராகுலை கை நீட்டி அவர் கோபமாக பேசுவதும், ராகுல் அந்த இடத்தில் கூனிக்குறுகி, சங்கடமான சூழ்நிலையில் நின்று கொண்டிருந்ததும் காண்பிக்கப்பட்டிருக்கிறது. கே.எல்.ராகுலை அவமானப்படுத்தும் நோக்கில் அந்த அணியின் உரிமையாளர் இப்படி நடந்து கொண்டதாக ரசிகர்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்.
லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயேங்காவின் செயலுக்கு நெட்டிசன்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு விளையாட்டு வீரரை இத்தனை கேமராக்கள் மற்றும் அத்தனை ஆயிரம் பேர் முன்னிலையில் இப்படி பேசுவது தவறு என்றும், இந்த செயலுக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.