கொழும்பில் அநுர அரசுக்கு முதல் அடி: “பட்ஜட் ” தோற்கடிப்பு!
கொழும்பு மாநகரசபையின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்று (22) நடந்த வாக்கெடுப்பில் வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதற்கமைய மேலதிக மூன்று வாக்குகளால் பாதீடு தோற்கடிக்கப்பட்டது.
கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் 48 ஆசனங்களை வென்ற தேசிய மக்கள் சக்தி, சுயேச்சைக்குழு மற்றும் சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைந்திருந்தது. எனினும், அந்த ஆதரவு தற்போது இழக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகரசபையில் 117 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் 29 உறுப்பினர்கள் உள்ளனர்
இந்நிலையிலேயே எதிரணிகள் ஒன்றிணைந்து கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டத்தை தோற்கடித்துள்ளன.
கொழும்பு மாநகரசபையென்பது முக்கியத்துவமிக்க சபையாகக் கருதப்படுகின்றது. அங்கு ஏற்பட்டுள்ள பின்னடைவானது தேசிய மக்கள் சக்திக்கு பலத்ததொரு அரசியல் அடியாகும் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வரவு- செலவுத் திட்டத்தை மீண்டும் முன்வைப்பதற்குரிய சந்தர்ப்பம் உள்ளது. எனவே, அதன்போது பாதீட்டை நிறைவேற்றுவதற்குரிய முழுமையான நடவடிக்கையில் தேசிய மக்கள் சக்தி இறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.





