10 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி வாழ்க….ரணிலுக்கு ஆதரவாக கோஷம்!
எமது தலைவர் வாழ்க……10 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு வாழ்த்துகள்…” இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக இன்று கோஷம் எழுப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலையானார்.
ரணில் விக்கிரமசிங்க நீதிமன்ற வளாகத்துக்கு வரும் வழியில் அரசியல் பிரமுகர்களும், ஆதரவாளர்களும் திரண்டிருந்தனர். ரணிலுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பட்டன.
இதன்போதே மேற்கண்டவாறு கோஷம் எழுப்பட்டது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில், அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் செல்வதற்கு அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னிலையாகியிருந்த போது அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட நிலையில் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்றைய தினம் மீண்டும் அழைக்கப்பட்டதையடுத்து, ரணில் விக்ரமசிங்க வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலையானார். அவரது பாரியாரும் வருகை தந்திருந்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாவார். அடுத்த ஜனாதிபதி ரணில் என்பதை குறிக்கும் விதத்திலேயே அவரது ஆதரவாளர்கள் 10 ஆவது ஜனாதிபதி என கோஷம் எழுப்பியுள்ளனர்.





