லண்டனில் சட்டவிரோத பிளாட்கள்: இந்திய வம்சாவளி தம்பதிக்கு ரூ. 28 கோடி அபராதம்!
லண்டனின் ப்ரெண்ட் (Brent) பகுதியில் சட்டவிரோதமாக வீட்டைப் பிரித்து ஆறு சிறிய குடியிருப்புகளாக (Flats) அமைத்து வாடகைக்கு விட்ட இந்திய வம்சாவளி தம்பதிக்கு, சுமார் £679,000 பிரித்தானிய பவுண்டுகள்( இலங்கை: 28.4 கோடி ரூபாய்; இந்திய 7.2 கோடி ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக ஆறு சிறிய குடியிருப்பை (Flats) கட்டி வாடகைக்கு விட்டு சம்பாதித்த நில உரிமையாளர்களுக்கு £679k பிரித்தானிய பவுண்டுகள் அபராதம்!
இந்தர்ஜீத் சோக்கர் மற்றும் ஜஸ்விந்தர் சோக்கர் என்ற தம்பதியினர், ப்ரெண்ட் பகுதியில் உள்ள தங்களது மூன்று அறைகள் கொண்ட வீட்டை (3-bedroom house), எவ்வித திட்ட அனுமதியும் (Planning Permission) இன்றி ஆறு சிறிய குடியிருப்புகளாக (Flats) மாற்றியுள்ளனர்.
இந்த அறைகள் அனைத்தும் மிகவும் சிறியதாகவும், மக்கள் வாழ்வதற்குத் தகுதியற்ற “சுகாதாரமற்ற” நிலையிலும் இருந்துள்ளன.
ப்ரெண்ட் கவுன்சில் (Brent Council) இதனைச் சரிசெய்யுமாறு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், அந்தத் தம்பதி அதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வாடகை வசூலித்து வந்துள்ளனர்.
நீண்ட கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, நீதிமன்றம் இவர்களுக்குக் கடுமையான அபராதங்களை விதித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவின் படி அவர்கள் இந்த வீட்டின் மூலம் சட்டவிரோதமாகச் சம்பாதித்த £564,367 பிரித்தானிய பவுண்ட் தொகையை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் (Proceeds of Crime Act-ன் கீழ்).
மற்றும் இந்தர்ஜீத் சோக்கருக்கு £25,000, பிரித்தானிய பவுண்ட்; ஜஸ்விந்தர் சோக்கருக்கு £15,000 பிரித்தானிய பவுண்ட் மற்றும் அவர்களின் நிறுவனத்திற்கு £25,000 பிரித்தானிய பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டது.
அத்துடன் கவுன்சிலின் சட்டச் செலவுகளுக்காக சுமார் £50,000 பிரித்தானிய பவுண்ட் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், இந்தர்ஜீத் சோக்கருக்கு 12 மாதங்கள் மற்றும் ஜஸ்விந்தர் சோக்கருக்கு 8 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
இது குறித்துப் பேசிய ப்ரெண்ட் கவுன்சில் உறுப்பினர் குரூபா ஷெத், “வாடகையாளர்களை ஏமாற்றி, மோசமான சூழலில் தங்கவைத்து, சட்டத்தை மதிக்காத நில உரிமையாளர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும். இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தெரிவித்தார்.





