இலங்கையில் இன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 65,000 பொலிஸார் கடமையில்!

இலங்கையில் இன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
நேற்று முதல் அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
தேவையேற்படின் தேர்தல் நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினரை இணைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்தார்.
இதற்கமைய பொலிஸாரால் நடமாடும் கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்போது எவரேனும் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபடுவார்களாயின் அவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
அத்துடன் அமைதி காலப்பகுதியில் தேர்தல் சட்டத்தை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்தார்.