இலங்கையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அங்கு, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், இரண்டு வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்பு மனுக்களில் சில வேட்பாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும், சிலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதன்படி புதிய வேட்புமனுக்களை அழைப்பதா இல்லையா என்பதை ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி தீர்மானிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த வருட ஆரம்பத்தில் நடைபெறும் எனவும், திகதிகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.