தென்சீனக் கடலில் எங்கள் விமானம் மீது ஒளிக்கதிர்கள் வீசப்பட்டன- பிலிப்பீன்ஸ் குற்றச்சாட்டு
தென்சீனக் கடலில் தனது விமானங்களில் ஒன்றின் மீது சீனா இம்மாதம் ஒளிக்கதிர்களைப் பாய்ச்சியதாகப் பிலிப்பீன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.
மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தென்சீனக் கடலின் பெரும்பகுதியை சீனா சொந்தம் கொண்டாடுகிறது. இதனால், சீனா, பிலிப்பீன்சுக்கு இடையே கடலில் அடிக்கடி மோதல்கள் நிகழ்கின்றன. இது அமெரிக்காவையும் உள்ளிழுத்து ஆயுதங்கள் ஏந்திய போராட்டத்துக்கு வழிகோலியுள்ளது. அதனால் பிலிப்பீன்சின் நட்பு நாடான அமெரிக்காவையும் இப்பிரச்சினை வட்டாரப் போர் ஒன்றில் இழுக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது.
அந்தக் கடல் பகுதியில் பிலிப்பீன்சின் மீன்வளத் துறை அலுவலகத்தின் விமானம் ஒன்று அப்பகுதியில் விழிப்புணர்வுப் பயணம் மேற்கொண்டபோது சீன விமானம் ஒன்று பொறுப்பற்ற, ஆபத்தான நடவடிக்கைளில் ஈடுபட்டதாக பிலிப்பீன்ஸ் கூறியது.
எவ்விதக் காரணமும் இல்லாமல் பிலிப்பீன்ஸ் நாட்டு விமானத்துக்கு மிக அருகில் பல ஒளிக்கதிர்கள் பாய்ச்சப்பட்டதாக பிலிப்பீன்ஸ் தெரித்தது.இதேபோல் ஆகஸ்ட் 22ஆம் திகதியிலும் தனது சுற்றுக்காவல் விமானத்துக்கு மிக அருகில் ஒளிக்கதிர்கள் பாய்ச்சப்பட்டதாக பிலிப்பீன்ஸ் கூறியது.
ஒளிக்கதிர்களை ராணுவ விமானங்கள் பெரும்பாலும் எதிரி நாட்டு ஏவுகணைகளை திசை திருப்பி தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அல்லது தங்களுக்கு ஆகாய வெளிச்சம் தேவைப்படும்போது பயன்படுத்தப்படுகின்றன.
இது குறித்து பிலிப்பீன்ஸ் அரசாங்கம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 24ஆம் திகதி) அன்று சீனா உடனடியாக தனது அபாயகரமான, தூண்டுதல் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. சீன நடவடிக்கை பிலிப்பீன்ஸ் நாடு தனது தனிப்பட்ட பொருளியல் மண்டலத்தில் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அதற்கு அச்சுறுத்தலாக விளங்குவதாகவும் பிலிப்பீன்ஸ் கூறியது.