“ குண்டுமழை ஓயட்டும்” : உலகெங்கிலும் அமைதியை வலியுறுத்தும் போப் லியோ!
போரை முடிவுக்குக் கொண்டுவர நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்த உக்ரைன் மற்றும் ரஷ்யா முன்வர வேண்டும் என்று போப் லியோ வலியுறுத்தியுள்ளார்.
புனித பீட்டர் சதுக்கத்தில் கூடியிருந்த கூட்டத்தினரிடம் தனது முதலாவது கிறிஸ்துமஸ் உரையை நிகழ்த்திய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வத்திக்கான் நகரில் கூடியிருந்த வழிபாட்டாளர்களுக்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று போப்பாண்டவர் பாரம்பரியமாக ஆற்றும் உர்பி எட் ஓர்பி (Urbi et Orbi) உரையின் போது, உலகெங்கிலும் உள்ள மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர அவர் அழைப்பு விடுத்தார்.
உக்ரைனைப் பற்றிப் பேசிய போப், “ஆயுதங்களின் கூச்சல் நிறுத்தப்படட்டும், சர்வதேச சமூகத்தின் ஆதரவு மற்றும் அர்ப்பணிப்புடன் சம்பந்தப்பட்ட தரப்பினர் நேர்மையான, நேரடி மற்றும் மரியாதைக்குரிய உரையாடலில் ஈடுபட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்து மற்றும் கம்போடியாவுடனான எல்லை மோதல்களை விமர்சித்த அவர், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் “பண்டைய நட்பு” மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றும் “சமரசம் மற்றும் அமைதியை நோக்கி பாடுபட வேண்டும்” என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய பிரசங்கத்தின் போது, போப் லியோ, உலகம் முழுவதும் வீடற்ற மக்களின் நிலைமைகள் மற்றும் மோதல்களால் ஏற்படும் சேதங்கள் குறித்து வருத்தம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





