ரகசிய சந்திப்புகள் அம்பலம்: பிரித்தானிய வலதுசாரி குழு சிக்கலில்
பிரித்தானியாவின் முக்கிய தீவிர வலதுசாரி குழுவான ‘பேட்ரியாட்டிக் ஆல்டர்நேட்டிவ்’ (Patriotic Alternative), ரஷ்யாவின் செல்வாக்கு மிக்க நபர்களுடன் தொடர்பு வைத்திருப்பது குறித்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதினின் (putin) நெருங்கிய ஆதரவாளரான தொழிலதிபர் கான்ஸ்டான்டின் மாலோஃபீவ் (Konstantin Malofeyev) ரஷ்யாவில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டிற்கு, பிரித்தானிய வலதுசாரித் தலைவர் மார்க் கோலட் (Mark Collett) அழைக்கப்பட்டிருந்தார்.
சென் பீட்டர்ஸ்பர்க்கில் (St Petersburg) நடைபெற்ற இந்த மாநாட்டில் கோலட் இணையவழியில் உரையாற்றியுள்ளார்.
பிரித்தானிய ஜனநாயகத்தைச் சீர்குலைக்கவும், சமூகப் பிளவுகளை ஏற்படுத்தவும் கிரெம்ளின் (Kremlin) இத்தகைய தீவிரவாதக் குழுக்களைப் பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, கடந்த காலங்களில் ரஷ்யத் தொடர்புள்ள டெலிகிராம் சேனல்கள் ஊடாக பிரித்தானியாவில் வன்முறையைத் தூண்டும் முயற்சிகள் நடந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும், தாம் எந்தவொரு கொடுப்பனவுகளையும் ரஷ்யாவிடம் இருந்து பெறவில்லை என மார்க் கோலட் மறுப்புத் தெரிவித்துள்ளார்.





