“தையிட்டி மண் தமிழர்களின் சொத்து” – விண்ணதிர முழங்கிய கோஷம்: பொலிஸார் குவிப்பு!
யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
தமது காணியில் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டு காணி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தே காணி உரிமையாளர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
சட்டவிரோத கட்டிடங்களை உடனே அகற்று என வலியுறுத்திய போராட்டக்காரர்கள், சட்டவிரோத விகாரைக்கு காவல்துறை காவலா எனவும் கேள்வி எழுப்பினர்.
தையிட்டி மண் தமிழர்களின் சொந்த மண், அதனை உரிமையாளர்களுக்கு வழங்கு எனவும் கோஷங்களை எழுப்பினர்.
தையிட்டி விகாரை பகுதியில் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
விகாரையின் வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது, விகாரையின் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்ககூடாது என பொலிஸார் அறிவுறுத்தினர்.
மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்த அறிவுறுத்தலையும் பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் தெரியப்படுத்தினர்.
அதேவேளை, தையிட்டி விகாரை பிரச்சினையானது தென்னிலங்கையிலும் எதிரொலிக்கின்றது.
விகாரைமீது எவரும் கைவைக்ககூடாது என தேசியவாத அமைப்புகள் வலியுறுத்திவருகின்றன.
மறுபுறத்தில் காணிகளை அதன் உரிமையாளர்களிடமே கையளிக்க வேண்டும் என தமிழ் அரசியல்வாதிகள் அழுத்தம் கொடுத்துவருகின்றனர்.
குறித்த பிரச்சினையை சுமூகமாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே அரசாங்கம் அறிவித்துள்ளது.





