அமெரிக்காவில் இந்திய மாணவர் மீது கத்திக் குத்து தாக்குதல்!
கத்தியால் சரமாரியாகக் குத்தப்பட்ட இந்திய மாணவர் ஆபத்தான நிலையில் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன்னில் இண்டியானா நகரில் வால்பரைசோவில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் ஞாயிறன்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்திய மாணவர் வருண்(24) என்பவரை ஜோர்டன் ஆண்ட்ராட் என்பவர் கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த வருண், ஃபோர்ட் வெயினில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் உடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறை அதிகாரிகள், ஜோர்டன் ஆண்ட்ராட்டை கைது செய்து அவரிடமிருந்து கத்தியைப் பறிமுதல் செய்தனர். இந்த கொலை முயற்சி தாக்குதலுக்குப் பின்னால் உள்ள சரியான சூழ்நிலைகள் மற்றும் நோக்கத்தைக் கண்டறிய காவல் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், இந்தியாவில் உள்ள வருணின் குடும்பத்தினரும் நண்பர்களும் அவர் குணமடைவார் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த மிருகத்தனமான தாக்குதலுக்கு நீதி கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வருண் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை செய்து வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.