லக்னோ அணியிலிருந்து விலகியதன் காரணத்தை வெளியிட்ட கே.எல்.ராகுல்!
அடுத்த ஆண்டு ஐபில் தொடருக்கான மேகா ஏலம் வரும் நவம்பர் 24 மற்றும் 25-ம் திகதிகளில் நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்திற்கான வேலைகள் தீவிரமாக ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் பங்கேற்கவுள்ள வீரர்களின் பட்டியலும், விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலையும் பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
அதில் மிக முக்கிய நட்சத்திர வீரர்கள் அந்தந்த அணியிலிருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. அந்த வரிசையில் நட்சத்திர வீர கே.எல். ராகுலும் ஒருவர். கே.எல்.ராகுல் கடந்த 3 வருடங்களாக லக்னோ அணியில் கேப்டனாக செயலாற்றி வந்தார்.
ஆனால், கடந்த ஐபிஎல் தொடரின் போதே அவருக்கும் அந்த அணி நிர்வாகத்துக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தது என்பது தெரியவந்தது . நடைபெற்ற 2024 ஐபிஎல் தொடரில், ஒரு போட்டியில் லக்னோ அணி தோல்வியடைந்த பிறகு அந்த அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா மைதானத்தல், ரசிகர்கள் மத்தியில் திட்டி இருந்தார்.
அது தொடர்பான வீடியோக்கள் வைரலாக அப்போது பரவி வந்தது. அதனைத் தொடர்ந்து அவர் அடுத்த ஐபிஎல் தொடரில் அந்த அணியிலிருந்து வெளியேறுவார் என ரசிகர்களால் பேசப்பட்டது. இந்த நிலையில் தற்போது கே.எல்.ராகுல் அந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு நடைபெற இருக்கும் மெகா ஏலத்தில் பங்கேற்க உள்ளார்.
இந்த நிலையில் அவர் தான் ஏன்? லக்னோ அணியிலிருந்து வெளியேறினேன் என்பதற்கான காரணத்தை விளக்கிக் கூறியிருக்கிறார். சமீபத்தில் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் அளித்த பேட்டி ஒன்றில் மனம் திறந்து ராகுல் பேசி இருந்தார். இது குறித்து பேசிய அவர், “இந்திய டி20 அணியில் நான் நீண்ட காலமாக விளையாடவில்லை.
ஒரு வீரராக நான் தற்போது எங்கே இருக்கிறேன் என்பதும் எனக்குத் தெரியும். நான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதும் எனக்கு தெரியும். எனவே, இந்த ஐ.பி.எல் தொடரில் என்னுடைய கிரிக்கெட்டை மிகவும் சுதந்திரமாக மகிழ்ச்சியுடன் விளையாடுவதற்காக ஆவலுடன் உள்ளேன்.
ஒரு அணியின் கேப்டனாக இருந்தால் அந்த அழுத்தத்தால் சுதந்திரமாக விளையாட முடியாது. இந்திய டி20 அணியில் மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய அடுத்த இலக்காகும்”, என்று கே.எல்.ராகுல் கூறியிருந்தார்.