கடத்தல் நாடகம்: ஆண் நண்பருடன் வெளிநாடு செல்ல திட்டமிட்ட மாணவி!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் தனது ஆண் நண்பருடன் வெளிநாடு செல்வதற்காக தந்தையிடம் கடத்தல் நாடகமாடிய இளம்பெண்ணை பிடிக்க, பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த காவ்யா (21) என்ற இளம்பெண்ணை, போட்டித் தேர்வுகளுக்காக, ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் அவரது பெற்றோர் சேர்த்துவிட்டிருந்தனர். அங்கு 3 நாட்கள் மட்டுமே இருந்த காவ்யா, விடுதியில் இருந்து வெளியேறி இந்தூருக்கு சென்று தனது இரு ஆண் நண்பர்களுடன் தங்கி வந்துள்ளார்.
இந்த விவகாரம் தனது பெற்றோருக்கு தெரியாமல் இருப்பதற்காக பயிற்சி மையத்தில் இருப்பது போன்ற புகைப்படங்களை அனுப்பி ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் காவ்யா, தன்னுடன் தங்கியிருந்த இரு ஆண் நண்பர்களில் ஒருவருடன் வெளிநாடு செல்ல திட்டமிட்டார். ஆனால் அதற்கு போதிய பணம் இல்லாததால் கடத்தல் நாடகமாடி பெற்றோரிடம் பணம் பறிக்க முடிவு செய்தார்.
இதையடுத்து அவர் தங்கியிருந்த அறையில் காவ்யாவை கயிற்றால் கட்டி வைத்திருப்பது போன்ற புகைப்படங்களை எடுத்து, தனது நண்பர் மூலம் தந்தையின் வாட்ஸ்ஆப்-க்கு அனுப்பியுள்ளார். மேலும், காவ்யாவை விடுவிக்க ரூ.30 லட்சம் பணம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் தகவல் அனுப்பியுள்ளனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த காவ்யாவின் தந்தை ரகுவீர் தாகத், இதுகுறித்து கோட்டா பொலிஸில் புகார் அளித்தனர். அதன்பேரில் பொலிஸார் காவ்யாவின் மற்றொரு நண்பரை அழைத்து விசாரணை நடத்தினர். இதில் அவர் இந்தூருக்கு தப்பிச் சென்றதும், அங்கிருந்து கடத்தல் நாடகமாடியதும் தெரியவந்தது.
இதையடுத்து காவ்யா மற்றும் இரண்டு ஆண் நண்பர்களின் செல்போனுக்கு பொலிஸார் தொடர்பு கொண்டனர். ஆனால் அவை சுவிட் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து இந்தூர் பொலிஸார் மூலம் அவர்களைப் பிடிக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.ஆண் நண்பருடன் வெளிநாடு செல்வதற்கு மகளே, தந்தையிடம் கடத்தல் நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.