பிரித்தானிய புதிய நகரங்கள் திட்டம்: சமூக வீடுகள் புறக்கணிக்கப்படுவதாக நிபுணர்கள் குற்றச்சாட்டு
பிரித்தானிய அரசாங்கத்தின் புதிய நகரங்கள் கட்டுமானத் திட்டம், போதிய லட்சியம் இல்லாமலும் சமூக வீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமலும் இருப்பதாகத் திட்டமிடல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
1.5 மில்லியன் வீடுகளைக் கட்டும் இலக்கின் ஒரு பகுதியாக, செப்டம்பர் 2025-இல் 12 இடங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இத்திட்டம் ஏழை எளிய மக்களின் வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மில்டன் கீன்ஸ் (Milton Keynes) போன்ற வெற்றிகரமான நகரங்களை உருவாக்கிய மூத்த திட்டமிடல் இயக்குநர்கள் இது குறித்துக் கவலை வெளியிட்டுள்ளனர். அறிவிக்கப்பட்டுள்ள பல திட்டங்கள் புதிய நகரங்களாக இல்லாமல், ஏற்கனவே உள்ள நகரங்களின் சிறிய விரிவாக்கமாகவே இருப்பதாக அவர்கள் சாடியுள்ளனர்.
மேலும், 40 சதவீத மலிவு விலை வீடுகள் என்ற இலக்கு இருந்தாலும், அவை உண்மையான சமூக வாடகை வீடுகளாக இருக்குமா என்பதில் தெளிவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக, செஷயர் (Cheshire) போன்ற பகுதிகளில் 20,000 வீடுகளைக் கட்டும் திட்டத்திற்கு உள்ளூர் மக்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பசுமை நிலங்கள் அழிக்கப்படுவதாகவும், முறையான உட்கட்டமைப்பு வசதிகள் இன்றி இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இத்திட்டம் வெறும் தனியார் லாபத்திற்காகவே அன்றி, மக்களின் வீட்டுப் பிரச்சினையைத் தீர்க்காது என அவர்கள் வாதிடுகின்றனர்.
எனினும், இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ள அரசாங்கம், நவீன வசதிகளுடன் கூடிய சிறந்த நகரங்களை உருவாக்கி வீட்டுப் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என உறுதியளித்துள்ளது.





