கேரளா – சிறுமியின் விநோத பழக்கம் … வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட 2 கிலோ முடி !
கேரள மாநிலத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவரின் வயிற்றிலிருந்து 2 கிலோ எடையுள்ள தலை முடியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர், கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு உள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்ததில், அவர் வயிற்றில் கட்டி போன்ற பொருள் இருந்ததை கண்டறிந்த மருத்துவர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.
இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது வயிற்றில் இருந்தது கட்டி அல்ல, தலைமுடி கொத்து என்பது தெரியவந்தது. சுமார் இரண்டு கிலோ எடையுள்ள அந்த தலைமுடி கொத்தை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் சிறுமியின் வயிற்றிலிருந்து அகற்றி உள்ளனர்.
இது தொடர்பாக அந்த சிறுமியிடம் மருத்துவர்கள் விசாரித்த போது, சிறு வயது முதலே தலைமுடியை கடித்து சாப்பிடும் பழக்கம் அந்த சிறுமிக்கு இருந்தது தெரியவந்தது. இதனால் அடிக்கடி தனது சொந்த தலை முடியை அவர் கடித்து சாப்பிடும் பழக்கத்தை வைத்திருந்து உள்ளார்.
இது வயிற்றில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து, இறுகி கட்டியானதால் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது தெரியவந்தது. தலைமுடியை சாப்பிடும் பழக்கம், கவலை மற்றும் மன அழுத்தம் உள்ள குழந்தைகளிடம் அரிதாக காணப்படுவதாகவும், வயிற்றில் உள்ள உணவுடன் முடி சேர்ந்து பெரிய கட்டியை உருவாக்கும் எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். எனவே பெற்றோர் தங்களது குழந்தைகளை தொடர்ந்து கண்காணிப்பதோடு அவர்களுடன் நேரம் செலவிடவும் வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.