வரிகள் தொடர்பாக டிரம்பிடம் ‘எளிதில் சமரசம்’ செய்யப் போவதில்லை :ஜப்பான் பிரதமர்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் தாம் எளிதில் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று ஜப்பானியப் பிரதமர் ஷிகெரு இஷிபா கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஜப்பானிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 35 விழுக்காடு வரையில் வரிவிதிக்கப்போவதாக எச்சரித்துள்ளார்; அதைத் தவிர்க்கும் முயற்சியில் தோக்கியோ ஈடுபட்டுள்ளது.
“நாங்கள் எளிதில் விட்டுக்கொடுக்கமாட்டோம். அதனால்தான் இந்நடவடிக்கை சவாலாக இருக்கிறது, அதிக நேரம் ஆகிறது,” என்று இஷிபா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சொன்னார்.
வரிவிதிப்பை டிரம்ப் இம்மாதம் ஒன்பதாம் தேதி வரை ஒத்திவைத்துள்ளார். அதற்கு முன்பு அவரின் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாணும் முயற்சியில் ஜப்பான் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
டிரம்ப், கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் வர்த்தகப் பங்காளி நாடுகள் மீது அடிப்படையாக 10%வரிவிதித்தார். கூடுதல் வரிவிதிப்பதை ஜூலை ஒன்பதாம் தேதி வரை ஒத்திவைத்தார்.
பேச்சுவார்த்தை நடத்த ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு வாய்ப்பளிக்க அவர் அவ்வாறு செய்தார். அமெரிக்காவிலிருந்து வரும் வாகனங்கள், அரிசி ஆகியவற்றைக் கூடுதலான அளவில் ஏற்றுக்கொள்ளுமாறு டிரம்ப், குறிப்பாக ஜப்பானுக்கு நெருக்குதல் அளித்துவருகிறார்.