சதம் விளாசினார் ஜெய்ஸ்வால் – வலுவான நிலையில் இந்தியா

ஓவல் டெஸ்டில் ஜெய்ஸ்வால் சதம் விளாச, இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட ‘ஆண்டர்சன் – சச்சின் டிராபி’ டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கி உள்ளது. இரு அணிகள் மோதும் ஐந்தாவது, கடைசி டெஸ்ட் லண்டன், கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 224, இங்கிலாந்து 247 ரன் எடுத்தன.
இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 75/2 ரன் எடுத்து 52 ரன் முன்னிலை பெற்றது.
ஆகாஷ் அரைசதம்
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. ஆகாஷ் தீப், 21 ரன்னில் கொடுத்த கேட்ச்சை கிராலே நழுவவிட்டார். வாய்ப்பை பயன்படுத்திய ஆகாஷ், டெஸ்ட் அரங்கில் தனது முதல் அரைசதம் கடந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 107 ரன் சேர்த்த போது, ஓவர்டன் வீசிய பவுன்சரில் அவுட்டானார் ஆகாஷ் (66).
ஜெய்ஸ்வால் சதம்
கேப்டன் சுப்மன் கில் (11) நிலைக்கவில்லை. சிறப்பான பேட்டிங்கை தொடர்ந்த ஜெய்ஸ்வால், டெஸ்டில் 6வது சதம் அடித்தார். கருண் (17) ஏமாற்றினார். டங்க் பந்தில் ஜெய்ஸ்வால் (118) வெளியேறினார். அடுத்து வந்த ஜுரல் 34 ரன் எடுக்க, ஜடேஜா (53) அரைசதம் அடித்தார். கடைசி நேரத்தில் அசத்திய வாஷிங்டன் 46 பந்தில் 53 ரன் எடுத்தார். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 396 ரன்னில் ஆல் அவுட்டானது.
இரண்டாவது இன்னிங்சில் 374 ரன் எடுத்தால் வெற்றி எனக் களமிறங்கியது இங்கிலாந்து அணி. சிராஜ் பந்தில் கிராலே (14) போல்டானார். மூன்றாவது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 50/1 ரன் எடுத்து, 324 ரன் பின்தங்கி இருந்தது. டக்கெட் (34) அவுட்டாகாமல் இருந்தனர்.
754 ரன்
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் அதிக ரன் எடுத்த வீரர் ஆனார் சுப்மன் கில். இவர் 5 டெஸ்டில் 754 ரன் (4 சதம், சராசரி 83.00) எடுத்தார். முன்னதாக 1990ல் இங்கிலாந்தின் கிரஹாம் கூச், 752 ரன் எடுத்திருந்தார்.
* டெஸ்ட் அரங்கில் ஒரு தொடரில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்களில் சுப்மன் கில் (754) இரண்டாவது இடம் பிடித்தார். முதலிடத்தில் கவாஸ்கர் உள்ளார். இவர், 1971ல் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 774 ரன் எடுத்துள்ளார்.
* ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன் எடுத்த கேப்டன்களில் பிராட்மேனுக்கு (810, 1936-37, எதிர்-இங்கிலாந்து) அடுத்த இடம் பிடித்தார் சுப்மன் (754). இங்கிலாந்தின் கிரஹாம் கூச் (752, 1990, இந்தியா) 3வது இடம் பெற்றார்.
கருண் காயமா
நேற்று அட்கின்சன் வீசிய பந்து (44.2 வது ஓவர்), கருண் நாயரின் வலது கை ஆட்காட்டி விரல் நுனியில் பலமாக தாக்கியது. பின் முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்டு பேட்டிங்கை தொடர்ந்தார்.
ஆகாஷ் அபாரம்
டெஸ்ட் அரங்கில் அமித் மிஸ்ராவுக்கு அடுத்து, அரைசதம் அடித்த, முதல் இந்திய ‘நைட் வாட்ச்மேன்’ ஆனார் ஆகாஷ் (66 ரன்). முன்னதாக 2011ல் அமித் மிஸ்ரா (ஓவல், எதிர்-இங்கிலாந்து) 84 ரன் எடுத்திருந்தார்.