யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் புதிய தலைவர் தெரிவு
																																		யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் புதிய தலைவராக மனோகரன் சோமபாலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கு புதிய தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை (14) நடைபெற்றது.
இதன்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் நடைபெற்ற தேர்தலில் வாக்களித்தனர்.
இதன்போது வேட்பாளர்களாக இளங்கணேசன் தர்சிகா, மனோகரன் சோமபாலன் ஆகிய இருவரும் போட்டியிட்டனர்.
ம.சோமபாலன் 326 வாக்குகளையும், இ.தர்சிகா 50 வாக்குகளையும் பெற்றனர்.
இதன்படி அதிக வாக்குகளை பெற்ற ம.சோமபாலன் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவராக யோ.நெவில்குமார் 2023 ஓகஸ்ட் மாதம் தெரிவு செய்யப்பட்டு இதுவரை காலமும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் சில வாரங்களில் புதிய கலைப்பீட மாணவர் ஒன்றியத்தை அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் பல்கலைக்கழக மாணவர் நலச்சேவைகள் கிளை ஊடாக முன்னெடுக்கப்படுமென தெரியவருகிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பீடங்களின் ஒன்றியங்கள் தெரிவான பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான மாணவர் ஒன்றியம் அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
        



                        
                            
