யாழ் மருத்துவ பீடம் வெற்றி
இலங்கை மருத்துவ பீடங்களுக்கு இடையிலான உயர் குருதி அழுத்த வினாடி வினா போட்டி 2023 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் குழு வெற்றிபெற்றுள்ளது.
வைகாசி மாதம் உயர் குருதி அழுத்த விழிப்புணர்வு மாதமாகவும், வைகாசி 17 ஆம் தேதி உலக உயர் குருதி அழுத்த தினமாகவும் உலக உயர் குருதி அழுத்த கழகத்தால் கொண்டாடப்படுகிறது.
இந்த முக்கியமான மாதத்தை நினைவுகூரும் வகையில், நாட்டில் உள்ள பல்வேறு மருத்துவ நிபுணத்துவ அமைப்புகளால் பல்வேறு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
“பேராதனை உயர் குருதி அழுத்த ஆராய்ச்சி மையம்” ஏற்பாடு செய்த மருத்துவ பீடங்களுக்கு இடையிலான வினாடி வினா போட்டி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
கொழும்பு, பேராதனை, யாழ்ப்பாணம், ரஜரட்டை, கிழக்கு மற்றும் சப்ரகமுவ ஆகிய மருத்துவ பீடங்களின் இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் குழு இதில் கலந்துகொண்டது.
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் இறுதியாண்டு மருத்துவ மாணவர் அணி 2023 ஆம் ஆண்டிற்கான வினாடி வினா போட்டியின் வெற்றியாளர்களாக (Champion) தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
குழுவில் சஹானா உமாசங்கர், ராஜபக்ஸ பத்திரனாலாகே இஷானி பிரபோதனி ராஜபக்ஸ, உதயகுமார் ஜதுஷன், நவரத்னராஜா துளசிஹான், தேனுக உருத்திரமூர்த்தி ஆகியோர் உள்ளடங்கினர்.
மேற்படி மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளையும் தேவையான வசதிகளையும் பேராசிரியர் இரா. சுரேந்திரகுமாரன், பேராசிரியர். தி.குமணன் , பேராசிரியர். ந.சுகந்தன் ,வைத்திய கலாநிதி வா.சுயனிதா மற்றும் வைத்திய கலாநிதி பிரம்மா தங்கராஜா ஆகியோர் வழங்கினார்.