147 ஆண்டுகளில் முதல் முறையாக வரலாறு படைத்த ஜடேஜா!
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் வீரராக ரவீந்திர ஜடேஜா ஜொலித்து வருகிறார். தற்போது அவர் வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் களமாடி விளையாடி வருகிறார். இதில் சென்னையில் நடந்த முதல் போட்டியில் அவர் முதல் இன்னிங்சில் 2 விக்கெட் மற்றும் 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் என மொத்தமாக 5 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.
இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டி வரும் ஜடேஜா, தற்போது, 147 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை மற்ற வீரர்கள் யாரும் சாதிக்காத சாதனையை பதிவு செய்துள்ளார். ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றிக்காக 2000 ரன்களுக்கும் மேல் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றுள்ளார்.
ஜடேஜாவின் இந்த சாதனையை சமன் செய்யக்கூடிய அடுத்த வீரர் இந்திய சுழற்பந்துவீச்சாளரான தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஆவார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 1943 ரன்கள் மற்றும் 369 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஜடேஜா, இப்போது 299 விக்கெட்டுகள் மற்றும் 3122 ரன்களுடன் இருக்கும் நிலையில், கான்பூர் டெஸ்டில் இன்னும் ஒரு விக்கெட் எடுத்தால் அவர் 300 விக்கெட்டுகள் மற்றும் 3000 ரன்கள் என்ற கிராண்ட் டபுள் சாதனையை எட்டிய வீரர்களின் எலைட் கிளப்பில் இணைவார். கிரிக்கெட் வரலாற்றில் அஷ்வின் மற்றும் கபில்தேவ் ஆகிய இருவர் உட்பட 10 வீரர்கள் மட்டுமே இந்த சாதனையை எட்டியுள்ளனர் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.