சூரியனை குறி வைத்த இஸ்ரோ – அடுத்தத் திட்டம் வெளியானது
திட்டமிட்டபடி சந்திரயான் 3ன் லாண்டர் வெற்றிகரமாக நிலவில் சாப்ட் லாண்டிங் செய்து சிறப்பாக இயங்கி வருகிறது.
இஸ்ரோவின் கனவுத் திட்டமான சந்திரயான் வெற்றியடைந்ததை அடுத்து, மேலும் பல திட்டங்களில் அமைதியாக இஸ்ரோ வேலை செய்து வருகிறது.
இதில் மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டமும், பூமியின் காலநிலை மாற்றத்தை துல்லியமாகக் கணிக்கும் திட்டமும், சூரியனை ஆய்வு செய்யும் திட்டமும் அடங்கியுள்ளன.
சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைந்ததைக் கொண்டாடிவரும் இஸ்ரோ, அதே மூச்சில் அடுத்த மாதம் சூரியனை நோக்கி ஒரு ராக்கெட்டை ஏவ உள்ளது. இது சூரியனின் காலநிலையைக் கணித்து ஆய்வு செய்வதற்காக ஏவப்படுகிறது.
இதற்கு, ‘ஆதித்யா L1’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் செப்டம்பர் முதல் வாரத்தில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். இதில் காலநிலைக் கணிப்பு செயற்கைக்கோளான இன்சாட் 3டி வைத்து ஏவப்படுகிறது.
அதேபோல, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான, ‘ககன்யான்’ திட்டத்தில் பயன்படுத்தப்படும், விண்வெளி வீரர்கள் தப்பிக்கும் அமைப்பை சரிபார்ப்பதற்கான சோதனை ஓட்டமும் விரைவில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்தியாவின் இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கூட்டாக இணைந்து உருவாக்கும் LEO எனப்படும் கண்காணிப்பு சேட்டிலைட்டும் பரிசோதனைக்கு தயாராக உள்ளது.
இது வெறும் 12 நாட்களில் உலகம் முழுவதையும் புகைப்படம் எடுத்து ஒரு வரைபடம் போலாக்கி பூமியின் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களை புரிந்து கொள்வதற்கான தரவுகளை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
‘ககன்யான்’ திட்டத்தின் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக, இஸ்ரோ இரண்டு ஆளில்லா பயணங்களுக்குத் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இதன் முதல் பணியை இஸ்ரோ நடத்தும் என சொல்லப்படுகிறது. எனவே, இஸ்ரோவின் அடுத்த இலக்காக சூரியன் இருக்கிறது.