இஸ்ரேல் – பாலஸ்தீன் மோதல் : இலங்கையர்களை அழைத்து வரவேண்டிய அவசியம் இல்லை!
காஸா பகுதியில் ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக தற்போது இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களை இந்த நாட்டுக்கு அழைத்து வர வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களிடம் இருந்து இதுவரையில் அவ்வாறான கோரிக்கை விடுக்கப்படவில்லை என பணியகம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், எந்தவொரு நபரும் இலங்கைக்கு வர விரும்பினால் அதற்குத் தேவையான வசதிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இஸ்ரேலில் தங்கியிருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் இலங்கைப் பெண் உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா கருத்து வெளியிடுகையில், இரண்டு இலங்கையர்கள் நேற்று காணாமல் போயுள்ளனர்.
மேலும், நேற்று மாலை ஒரு பெண் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பார்த்தோம். ஒருவர் இறந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்த ஒரு முறை உள்ளது. தூதரக அதிகாரிகள் சடலத்தைப் பார்க்க விரும்புகிறார்கள்.
காஸா பகுதியில் நடந்து வரும் போர் காரணமாக, அந்த பகுதிகளுக்கு தூதர்கள் செல்ல முடியாது. சந்தர்ப்பம் கிடைத்தவுடன் அந்தப் பகுதிக்குச் சென்று இந்த உறுதிமொழியைச் செய்ய வேண்டும். அதுவரை இந்த இலங்கையர் காணாமல் போனவராகவே கருதப்படுகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.