அனைத்துலக நீதிமன்றத் தீர்ப்பைப் புறக்கணித்து ராஃபா மீது தாக்குதல்கள் தொடர்ந்த இஸ்ரேல்
ராஃபா மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று அனைத்துலக நீதிமன்றம் மே 24ம் திகதி தீர்ப்பளித்தும் பலனில்லாமல் போனது.தீர்ப்பைப் புறக்கணித்து இன்று( 25) இஸ்ரேல், ராஃபா மீதான தாக்குதல்களைத் தொடர்ந்தது.
காஸாவின் வடக்குப் பகுதியில் மூன்று பிணைக்கைதிகளின் சடலங்களை மீட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தகவல் வெளியிட்டதைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்திருக்கும் பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று அனைத்துலக நீதிமன்றம் வலியுறுத்தியது.
பாலஸ்தீன அகதிகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் சென்றடைய எகிப்துக்கும் காஸாவுக்கும் இடையிலான இணைப்பைத் திறந்துவைத்திருக்கும்படி இஸ்ரேலுக்கு அனைத்துலக நீதிமன்றம் உத்தரவிட்டது.இம்மாதத் தொடக்கத்தில் ராஃபா மீது தாக்குதல் நடத்த தொடங்கியபோது இஸ்ரேல் அந்த இணைப்புப் பாதையை மூடியது.
அனைத்துலக நீதிமன்றம் எடுத்துள்ள முடிவு தவறானது என்று தெரிவித்த இஸ்ரேல், ராஃபா மீதான தாக்குதலை நிறுத்தப்போவதில்லை என்று இஸ்ரேல் தெரிவித்தது.ஹமாஸ் போராளிகள் ராஃபாவில் பதுங்கியிருப்பதாகவும் அவர்களை வேரோடு அழித்தால் மட்டுமே இஸ்ரேல்-பாலஸ்தீனம் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்றும் அது தெரிவித்தது.
ஆனால், ராஃபாவில் மில்லியன்கணக்கான பாலஸ்தீன அகதிகள் இருப்பதாகவும் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டால் உயிர்ச் சேதம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் என்றும் உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.
போர் நிறுத்த பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டும் என்ற இலக்குடன் ராஃபா மீதான தாக்குதலை நிறுத்திவைக்க இஸ்ரேலுக்கு அனைத்துலக நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால், தீர்ப்பை நேரடியாக அமல்படுத்தும் அதிகாரம் அனைத்துலக நீதிமன்றத்துக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.