இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1600ஐக் கடந்தது!
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் இரு தரப்பிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,600ஐ தாண்டியுள்ளது.
இதற்கிடையில், முன்னறிவிப்பின்றி காஸா மீதான ஒவ்வொரு வான்வழித் தாக்குதலுக்கும் ஒரு பணயக்கைதி கொல்லப்படுவார் என்று ஹமாஸ் அறிவித்துள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் இருந்து தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் இன்று நான்காவது நாளாக நீடித்து வருகிறது.
ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் மட்டும் 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் இஸ்ரேலிய குடியிருப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டினரும் உள்ளடங்குவர்.
இந்தக் குழுவைத் தவிர, நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்னும் ஹமாஸால் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர், அவர்கள் பற்றிய குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
ஹமாஸ் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அந்நாட்டு விமானப்படை வெளியிட்ட தாக்குதல்களை காட்டும் வீடியோவையும் வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இதேபோல் இந்த மோதல் நடவடிக்கையில் பாலஸ்தீனியர்கள் சார்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 700ஐக் கடந்துள்ளது. இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு லட்சத்து தொண்ணூறு ஆயிரத்தை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.