சிவப்பு கோட்டை தாண்டிய இஸ்ரேல் – எச்சரிக்கை விடுத்த ஹவுத்திகள்!
இஸ்ரேல் சோமாலிலாந்தை (Somaliland) தனி நாடாக அங்கீகரித்துள்ள நிலையில், ஹவுத்தி போராளிக் குழுவினர் இஸ்ரேலை கடுமையாக எச்சரித்துள்ளனர்.
இஸ்ரேல் சிவப்பு கோட்டை தாண்டியுள்ளதாக ஹவுத்தி தலைவர் அப்தெல்-மாலிக் அல்-ஹவுத்தி (Abdel-Malik al-Houthi) குறிப்பிட்டுள்ளார்.
“சோமாலிலாந்தில் எந்தவொரு இஸ்ரேலிய இருப்பும் எங்கள் ஆயுதப் படைகளுக்கு இராணுவ இலக்காக நாங்கள் கருதுகிறோம், ஏனெனில் அது சோமாலியா மற்றும் ஏமனுக்கு எதிரான ஆக்கிரமிப்பாகவும், பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது,” என்று அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேலின் முடிவு பரந்த பிராந்திய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது எனவும், “சோமாலியா மற்றும் அதன் ஆப்பிரிக்க சுற்றுப்புறங்களையும், ஏமன், செங்கடல் மற்றும் செங்கடலின் இரு கரையோரங்களிலும் விரோதமான நிலைப்பாட்டை கொண்டுவரும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
1990 களின் முற்பகுதியில் சோமாலியாவிலிருந்து பிரிந்ததிலிருந்து சுயமாக அறிவிக்கப்பட்ட குடியரசிற்கு எந்தவொரு நாடும் முறையான அங்கீகாரத்தை வழங்கவில்லை.
அந்நாடானது மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஒரு நடைமுறை நாடாக செயல்பட்டு வருகிறது, அதன் சொந்த நாணயம், இராணுவம் மற்றும் அரசியல் நிறுவனங்களை பராமரித்து வருகிறது, ஆனால் இராஜதந்திர ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை அதனை தனி நாடாக அங்கீகரித்தது. இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் வெளியிட்டுள்ளன.
இதற்கிடையே சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரிப்பது ஏடன் வளைகுடா மற்றும் செங்கடல் கப்பல் பாதைகளுக்கு மூலோபாய அணுகலை வழங்கக்கூடும், இது ஏற்கனவே நிலையற்ற பாதுகாப்பு நிலப்பரப்பை சிக்கலாக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.




