இந்தியா செய்தி

இலங்கையில் இருந்து இந்தியா சென்ற ஐஎஸ்ஐஎஸ் – வெளியான திடுக்கிடும் தகவல்கள்

இந்தியாவின் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கு கூட தயாராக இருந்ததாக குஜராத் பொலிஸ்மா அதிபர் விகாஷ் சாஹே தெரிவித்துள்ளார்.

இந்த நான்கு பயங்கரவாதிகளும் நீர்கொழும்பு மற்றும் கொழும்பு பகுதிகளில் வசிப்பவர்கள் என குஜராத் பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தாக்குதல் நடத்தும் நோக்கில் இந் நாட்டிலிருந்து அகமதாபாத் நகருக்கு வந்த இலங்கையை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் அகமதாபாத் சர்தார் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

இவர்களை குஜராத் தீவிரவாத தடுப்புப் படையினர் கைது செய்து நேற்று மதியம் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்நிறுத்தியதுடன், இதில் பல தகவல்கள் வெளியாகின.

இதன்படி, கைது செய்யப்பட்ட  33 வயதான மொஹமட் நுஸ்ரத் என்ற நபர் நீர்கொழும்பைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொழும்பை சேர்ந்த 27 வயதான மொஹமட் நஃப்ரான், 43 வயதான மொஹமட் ரஷ்டீன் மற்றும் 35 வயதான மொஹமட் ஃபரிஷ் ஆகியோர் கைது செய்யப்பட்ட ஏனைய பயங்கரவாதிகளாவர்.

இவர்கள் இந் நாட்டிலிருந்து சென்னை வழியாக அகமதாபாத் நகருக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் மொழியை மட்டுமே பயன்படுத்தும் நான்கு பயங்கரவாதிகளும் மொழி பெயர்ப்பாளர் மூலம் விசாரிக்கப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து கைப்பேசி, இரு நாட்டு நாணயத்தாள்கள் மற்றும் விமானச் சீட்டுக்களும் ஒருவரின் பயணப் பொதியில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து செயற்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரான அபுவை கடந்த பெப்ரவரி மாதம் சமூக ஊடகங்கள் மூலம்  இந்தக் குழு அடையாளம் கண்டுள்ளதாகவும், பின்னர் இவர்கள் கடும்போக்கு ISIS சித்தாந்தவாதிகளாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அபுவின் ஆலோசனையின் பேரில் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், இலங்கை பணத்தில் 4 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் தற்கொலைப்படை தாக்குதலுக்கு கூட தயாராகி இருந்ததாக தகவல் வௌியாகியுள்ளது.

இவர்களது கைப்பேசிகளை ஆய்வு செய்ததில், அகமதாபாத் நகருக்கு அருகில் உள்ள நானாசிடோலா பகுதியில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பான தகவல்கள் அந்நாட்டு பாதுகாப்பு படையினருக்கு அம்பலமாகியுள்ளது.

பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 03 கைத்துப்பாக்கிகளும் அதற்கு பயன்படுத்தப்பட்ட 20 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நான்கு இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக சேகரிக்கப்பட்ட வாய்மொழி மற்றும் விசாரணை ஆதாரங்களின் அடிப்படையில், நாட்டின் தண்டனைச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர்  தேஷ்பந்து தென்னகோனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட நான்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளும் இதற்கு முன்னர் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களாக செயற்பட்டவர்கள் என இந்திய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு அன்று பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய சஹ்ரான் ஹசிம் தலைமையிலான பயங்கரவாதிகள் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்களாவர்.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு இந்த அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content