கொலை செய்ய வந்த இடத்தில் பெண்ணுக்கு பணம் கொடுத்து உதவிய இஷாரா

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபராக கருதப்படும் இஷாரா செவ்வந்தி தொடர்பான பொலிஸ் விசாரணையின் போது புதிய தகவல்கள் கசிந்துள்ளன.
கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட அன்றைய தினம், நீதிமன்றத்தில் தன்னை சட்டத்தரணி என்று எண்ணிய பெண் ஒருவர், தனது வழக்கு ஒன்றில் வாதாட கோரியதாக செவ்வந்தி தெரிவித்துள்ளார்.
குறித்த பெண்ணிடம் போதியளவு பணம் இல்லாமையினால் குறைந்த செலவில் தனது வழக்கை வாதாடுமாறு தன்னிடம் கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நான் கமாண்டோ சாலிந்துவுடன் நீதிமன்றத்திற்கு சென்ற போது, சட்டத்தரணிகள் ஓய்வு பெறும் அறையில் இருந்தேன். அங்கு வந்த ஒரு பெண் என்னை வழக்கறிஞராக நினைத்து தனது குடும்பத்தில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து வழக்கில் உதவுமாறு கேட்டார்.
அந்தப் பெண் தனது கணவரால் மிக மோசமாக தாக்கப்பட்டதாக கூறியதோடு, வழக்காட தன்னிடம் ஆயிரம் ரூபா மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண்ணின் நிலைமை எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. எனவே, நான் வேறொரு வழக்கில் ஆஜராகவுள்ளதாகவும், மற்றுமொரு பெண் சட்டத்தரணியிடம் கோருமாறும் குறிப்பிட்டேன்.
பின்னர், அந்தப் பெண் மற்றொரு வழக்கறிஞரிடம் சென்றபோது, வழக்கில் ஆஜராக 2000 ரூபாய் கேட்டுள்ளார். எனினும் அதற்கு அவரிடம் பணம் இல்லையென தெரிவித்துள்ளார்.
அவரின் நிலைமையை புரிந்து கொண்டு தன்னிடமிருந்த 5000 ரூபாவை அந்தப் பெண்ணுக்கு கொடுத்து உதவியதாகவும், அதற்கு அந்தப் பெண் கையைப் பிடித்து நன்றி தெரிவித்ததாகவும் இஷாரா செவ்வந்தி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.