இலங்கை செம்மணிப் புதைகுழி அகழ்வாய்வில் தலையிட அரசு முயற்சிக்கிறதா?

நீதிமன்றத்தால் குற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்ட யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வில் அரசாங்கம் நேரடியாகவும் மறைமுகமாகவும் செல்வாக்கு செலுத்தியுள்ளதாக நாட்டின் முன்னணி மனித உரிமைகள் சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன நாணாயக்கார, தெரிந்தோ தெரியாமலோ அகழ்வாய்வில் தலையிட முயற்சிப்பதாக மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் (CHRD) நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல் சுட்டிக்காட்டுகிறார்.
“நீதி மற்றும் சட்ட அமைச்சர் நாணாயக்கார நேர்காணல்களை வழங்குகிறார், நாடாளுமன்றத்தில் பேசுகிறார். அது சரி. ஆனால் அவருக்குத் தெரியாமல்…, அவருக்குத் தெரியுமா இல்லையா என எனக்குத் தெரியவில்லை, தலையிட முயற்சிகள் நடந்துள்ளன.”
கொழும்பில் அமைந்துள்ள இலங்கை ஆசிரியர் சங்க மண்டபத்தில் (குரு மெதுர) கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போது மூத்த சட்டத்தரணி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
“செம்மணியில், இன்று | நீதி | அரசியல்” என்ற கருப்பொருளில் நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினால் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி நடராஜர் காண்டீபனும் இந்த கலந்துரையாடலில் உரையாற்றினார்.
“நீதி அமைச்சின் செயலாளர், செம்மணி புதைகுழியில் அகழ்வாய்வு செய்து கொண்டிருந்த ஒரு நிபுணரைத் தொடர்பு கொண்டு சில ஆலோசனைகள் அல்லது வழிகாட்டுதல்களை வழங்க முயன்றுள்ளார், ஆனால் அவர் அவருடன் பேச மறுத்துவிட்டார், இறுதியாக அவர் பொலிஸ் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும், அவர்கள் அவரது அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தயாராக இல்லை”, என சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல் தெரிவித்துள்ளார்.
“இதற்கமைய, அரசாங்கம் நினைப்பது போல் இந்தச் செயல்பாட்டில் தலையிட முயற்சிகள் நடந்துள்ளன. ஒருவேளை இவற்றை தாமதப்படுத்துவது நோக்கமாக இருக்கலாம். நோக்கம் என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை.”
நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன பணியாற்றுகின்றார்.
இந்த அதிகாரி முன்னர் செம்மணி புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் தலையிட்டதாக சுட்டிக்காட்டிய மூத்த சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல், இடைநடுவில் நிறுத்தப்பட்ட செம்மணி புதைகுழி விசாரணை 2001ஆம் ஆண்டு முதன்முதலில் மேற்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் திணைக்களத்தை அவர் பிரதிநிதித்துவப்படுத்தியதாக குறிப்பிடுகின்றார்.
“நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அகழ்வாய்வு நடந்தது. அதே நபர் சட்டமா அதிபர் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டார். பல நாட்கள் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு சுமார் 15 எலும்புக்கூடுகளைக் கண்டுபிடித்த பின்னர், பணிகள் அத்துடன் நிறுத்தப்பட்டது.”
இரண்டாவது கட்டமாக 32 நாட்கள் அகழ்வாய்வுக்குப் பின்னர், ஓகஸ்ட் 6, 2025 அன்று அகழ்வாய்வு குழுவிற்கு ஓய்வு அளிக்க அகழ்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது, செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழி அகழ்வாய்வில் சிறுவர்கள், குழந்தைகள் உட்பட 140 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதோடு, அடையாளம் காணப்பட்ட மொத்த எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 147 ஆக உயர்வடைந்தது. செம்மணி மனித புதைகுழியின் அகழ்வாய்வுகள் இன்றைய தினம் (ஓகஸ்ட் 25) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அண்மையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார, இலங்கையில் 17 மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக முதன்முறையாக வெளிப்படுத்தியிருந்தார். அவை குறித்த பெயர் விபரங்களையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.