சமூக தொற்றாக மாறுகிறதா மெனிங்கோகோகல் : கொழும்பில் ஒருவர் அடையாளம்!
காலி சிறைச்சாலையில் பல கைதிகளுக்கு பரவிய மெனிங்கோகோகல் தொற்று சமூக தொற்றாக பரவும் அபாயநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொற்றுடன் கொழும்பு மாவட்டத்தில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நோயாளி ஜாஎல பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடையவர் எனவும், அவர் இரத்மலானை சுகாதார மற்றும் மருத்துவ பிரதேசத்தில் உள்ள நிறுவனமொன்றில் பணியாற்றுவதாகவும் தெரியவந்துள்ளது.
காய்ச்சல் காரணமாக குறித்த நபர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரத்மலானை சுகாதார வைத்திய அதிகாரி ஜே. எம். குணதிலக்க தெரிவித்தார்.
மேலும், இந்த நபர் பணிபுரிந்த இடத்தில் உள்ள சுமார் 30 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வழங்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுகாதார நிபுணர்களின் தேசிய இயக்கத்தின் தலைவர் டொக்டர் சமல் சஞ்சீவ, இந்த பக்டீரியா தொற்றுக்குள்ளானவர்களை இனங்காண்பது அவசியமானது.
பாடசாலைகள் இன்னும் சில தினங்களில் திறக்கப்படவுள்ளதால், அதனைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.