அணு ஆயுதங்கள் தொடர்பில் இஸ்ரேலுக்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை… பதற்றத்தில் உலக நாடுகள்
இஸ்ரேல்- ஈரான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் திடீரென அணு ஆயுதங்கள் குறித்து மிகப் பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில் சில காலமாகவே பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.
இஸ்ரேல்- ஈரான் இடையேயும் மோதல் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளும் சில வாரங்களுக்கு முன்பு மாறி மாறி தாக்கிக் கொண்டது சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்தது. இதற்கிடையே அணு ஆயுதங்கள் தொடர்பாக இஸ்ரேலுக்கு ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை பகீர் கிளப்பியுள்ளது.
ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆலோசகர் ஒருவர், இஸ்ரேலுடன் அதிகரித்து வரும் பதற்றம் தொடர்பாகவும் அணு ஆயுத தாக்குதல் தொடர்பாகவும் கூறியுள்ள தகவல்கள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அதாவது இஸ்ரேலால் தங்கள் நாட்டிற்கு ஆபத்து ஏற்படும் என்றால்.. யார் மீதும் தாக்குதல் நடத்தக்கூடாது என்ற ஈரானின் அணு ஆயுத நிலைப்பாட்டை மாற்ற வேண்டி இருக்கும் என்று அந்நாட்டு உட்சபட்ச தலைவரின் ஆலோசகர் கமல் கர்ராசி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “அணுக்குண்டை உருவாக்கும் திட்டம் எதுவும் இப்போது எங்களிடம் இல்லை.. ஆனால் ஈரானின் இருப்புக்கு ஒருவேளை அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுத விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை” என்றார்.
உலக வல்லரசு நாடுகளுடன் 2015-ம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்தை மீறி ஈரான் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக யுரேனியத்தை 60 சதவீதம் செறிவூட்டி வருகிறது என்று கூறப்படுகிறது.