பொருளாதார நெருக்கடியால் ஈரானில் போராட்டங்கள் தீவிரம்
ஈரானின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை எதிர்த்து முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் ஒன்பதாவது நாளை எட்டியுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை வெளியான வீடியோக்களில், தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல மாகாணங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.
கடந்த வாரத்திலிருந்து நாட்டின் 31 மாகாணங்களில் 26 மாகாணங்களில் போராட்டங்கள் நடந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இந்த போராட்டங்களில் இதுவரை குறைந்தது 19 போராட்டக்காரர்களும், ஒரு பாதுகாப்புப் படை உறுப்பினரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் உயிரிழப்புகள் ஏற்பட்டால், ஈரானிய அதிகாரிகள் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இதனிடையே, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாக்கர் கலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) போராட்டக்காரர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு கவனத்தில் எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதேவேளை வெளிநாட்டு தலையீடு அல்லது கலவர முயற்சிகள் கடுமையாக எதிர்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
இதன் பின்னணியில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானிய மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த ஈரான், இஸ்ரேலும் சில அமெரிக்க அதிகாரிகளும் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவதாக குற்றம் சுமத்தியுள்ளது.
அமெரிக்க தடைகள் காரணமாக ஈரானிய நாணயத்தின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்ததும், பணவீக்கம் 40 சதவீதமாக உயர்ந்ததுமே இந்த போராட்டங்களுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
முதலில் கடைக்காரர்கள் போராட்டத்தை தொடங்கிய நிலையில், பின்னர் பல்கலைக்கழக மாணவர்களும் இதில் இணைந்தனர்.
2022 ஆம் ஆண்டு மஹ்சா அமினி மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட போராட்டங்களுக்குப் பிறகு, இவை ஈரானில் நடைபெறும் மிகப் பரவலான போராட்டங்களாக கருதப்படுகின்றன.





