கஜகஸ்தானுக்கு விஜயம் செய்யுமாறு இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பு!
கஜகஸ்தான் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு கஜகஸ்தான் தூதுக்குழுவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்திற்கான அஸ்தானா சர்வதேச மன்றம் தொடர்பான இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை அண்மையில் இடம்பெற்றது.
குறித்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம், சுற்றுலா, எரிசக்தி மற்றும் போக்குவரத்து தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் இருந்து இலங்கைக்கு நேரடி விமானங்களை ஆரம்பிப்பது குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இந்த வருடத்திற்கான அஸ்தானா சர்வதேச மன்றம் எதிர்வரும் ஜூன் மாதம் இடம்பெறவுள்ளதுடன் இதில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் பங்கேற்கவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை அஸ்தானா சர்வதேச மன்றம் தொடர்பான மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.