சுரேஷ் சாலி மற்றும், பிள்ளையானுக்கு எதிரான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் – விஜித ஹேரத்!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சுரேஷ் சாலியை உடனடியாக பதவி நீக்கம் செய்து அவருக்கு எதிராகவும் பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிராகவும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இன்று (06.09) செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்படி தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ சுரேஷ் சாலி அரச புலனாய்வு சேவையின் (SIS) பணிப்பாளராக இருந்து கொண்டு விசாரணை நடத்துவது அபத்தமானது எனவும் கூறியுள்ளார்.
“சனல் 4 காணொளியில் மௌலானா வெளிப்படுத்தியபடி, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் பிள்ளையானுக்கும் சுரேஷ் சாலிக்கும் ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரிகளுடன் நேரடித் தொடர்புள்ளது தெளிவாகுகிறது.
விசாரணைகள் சரியான திசையில் செலுத்தப்படாததால், உண்மையான குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ளனர். கோட்டாபய ராஜபக்ச இனி ஜனாதிபதியாக இல்லாத காரணத்தினால் அவருக்கு எதிரான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.